இலங்கை வர எதிர்ப்பாத்திருந்த ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி!
பிரபல பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல மீண்டும் ஒருமுறை மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
அவருக்கு எதிரான ரூ. 60 கோடி மதிப்புள்ள மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டு, இலங்கையின் கொழும்பில் நடைபெறவிருந்த யூடியூப் நிகழ்வில்(ஒக்டோபர் 25 முதல் 29 வரை) கலந்துகொள்ள ஷில்பா ஷெட்டி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்கான அவரது கோரிக்கையை பரிசீலிப்பதற்கு முன்னர், அவர் நிலுவையில் உள்ள தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மும்பை பொலிஸாரின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) நடத்தி வரும் பெரிய அளவிலான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த முடிவு வந்துள்ளது.
எழுத்துப்பூர்வ ஆவணம்
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட "தேடப்படும் நபருக்கான சுற்றறிக்கை" (Lookout Circular - LOC) இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றும், நீதிமன்றம் அல்லது விசாரணை அமைப்பின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் அவர்கள் வெளிநாடு செல்ல சட்டப்படி தடை உள்ளது என்றும் நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி கோரி ஷில்பா ஷெட்டியின் சட்டத்தரணி விண்ணப்பித்தபோது, நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழின் நகலைக் நீதிமன்றம் கோரியுள்ளது.
எனினும், அழைப்பு குறித்து தொலைபேசி மூலம் மட்டுமே பேசப்பட்டது என்றும், பயண அனுமதி கிடைத்த பின்னரே எழுத்துப்பூர்வ ஆவணம் வழங்கப்படும் என்றும் சட்டத்தரணி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத நீதிமன்றம், தடையை நீக்க மறுத்ததுடன், பயண அனுமதி கேட்பதற்கு முன், இந்தத் தம்பதியினர் முதலில் ரூ. 60 கோடி மோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




