மாவீரர் தின அனுஷ்டிப்பு : எட்டு பேருக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு
புதிய இணைப்பு
மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காகச் சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாகச் சென்று வருகிறார்கள்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரினால் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்வு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.
இதில் சிலரது முகவரிகள் தவறாக பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களைத் தேடி வவுனியா பொலிஸார் வீடு வீடாகத் திரிந்து வருகின்றனர்.
பின்னர் தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்குச் சென்று குறித்த தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள் பிழையாக உள்ளதாகவும், பொலிஸாரினால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியா நீதிமன்றம் எட்டு பேருக்குத் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தடை
உத்தரவினை வழங்கியுள்ளது.
தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை மாவீரர்கள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதிமன்றம் குறித்த 8 பேருக்குத் தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினை சேர்ந்த செயலாளர் கோ. ராஜ்குமார், தலைவி கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கயேந்திரகுமார் அல்லது கயன், சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நபர்கள் வவுனியா பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்துவதற்குக் கட்டளையிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12 மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமாகிய மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களைத் திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
திருநகர் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இன்று இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





