நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு: வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டுக்கும் நீதிமன்றம் அனுமதி
நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்து, வெடுக்குநாறி மலையில் எதிர்வரும் சனிக்கிழமை சைவ வழிபாட்டை மேற்கொள்ள வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை சங்க தேரர் சந்தபோதி தலைமையில் சம்புத்த பூஜை என்ற பெயரில் பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாடு
இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி சைவ மக்களும் அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த தினத்தில் அந்த பகுதியில் இரு தரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்ப்படும் என்று நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் நேற்று (10.09) நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் தொல்பொருள் பகுதிகளுக்கு சேதத்தை விளைவிக்காமல் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமல் பூஜை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் இரு தரப்பிற்கும் கட்டளையிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இதேவேளை, சைவ மக்களின் பூஜைகளை அன்றைய தினம் மேற்கொள்வதால் சமாதான குலைவு ஏற்படலாம். எனவே அன்றைய தினம் அதற்கு தடைவிதிக்குமாறு நெடுங்கேணி பொலிஸார் மற்றும் தேரரின் தரப்பினால் மன்றில் இறுக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் வெடுக்குநாறிமலையில் வழிபடும் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அன்றைய தினம் சைவ மக்களும் வழமையான பூஜை வழிபாடுகளில் ஈடுபட மன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி தி. அருள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26