போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது
கர்ப்பிணியான மனைவியை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் பாசாங்கில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த கணவன் - மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (26) நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்
தனது கர்ப்பிணி மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக பாசாங்கு செய்து ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பல்வேறு இடங்களில் வைத்து விற்பனை செய்த கணவன் - மனைவி குறித்து நாவலப்பிட்டி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த தம்பதியினர் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார்சைக்கிளில் சென்று ஈஸி கேஷ் முறையில் பணம் பெற்று ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வருவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் தெரிய வந்திருந்தது.
அதனையடுத்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் நாவலப்பிட்டி தொலஸ்பாக மார்க்கத்தில் உள்ள பழைய தொடருந்து அதிகாரிகள் குடியிருப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகநபர்கள் கைது
அப்போது ஐஸ் போதைப்பொருள் பொதிகளை வைத்து விற்பனை செய்ய முயன்றபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்டபோது, 52 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் சில பொதிகள் சந்தேகநபரான பெண்ணின் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு பொதியின் விலை சுமார் 7000 ரூபாவாக இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



