ஜனாதிபதியின் வருகையால் மாங்குளமாக மாறிய வைத்தியசாலையின் பெயர்ப்பலகை
மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் ''மாங்குளம்'' என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகம் அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு முன்னர் வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் சமூக ஆர்வலர்களால் உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இதற்கமைய திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப்பலகையினை மாற்றி, விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் உடனடியாக குறித்த பெயர்ப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிய பெயர்ப்பலகை பொறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெயர்ப்பலகை எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிதாக இன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |