கோவிட் -19 வைரஸ் தென்னாப்பிரிக்க மாறுபாட்டின் அச்சுறுத்தல்! - வடக்கு லண்டனில் விசேட சோதனை
கோவிட் -19 வைரஸ் தென்னாப்பிரிக்க மாறுபாட்டின் வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர் வடக்கு லண்டனின் ஒரு பகுதியில் விசேட சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வியாழக்கிழமை முதல், பார்னெட்டின் பெருநகரத்தில் உள்ள பின்ச்லே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, N3 அஞ்சல் குறியீடு பகுதி அல்லது உள்ளூரை சேர்ந்த கடைக்கு வரும் நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஞ்ச்லி சென்ட்ரல் ஸ்டேஷன் கார் பார்க்கில் ஒரு மொபைல் சோதனை பிரிவு அமைக்கப்படுவதுடன், குழுவினர் வீடு வீடாக சென்று பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் பிரித்தானியாவில் மேலும் 38 கோவிட் - 19 வைரஸ் தொடர்பான மரணங்கள் மற்றும் 2,491 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே செவ்வாயக்கிழமை 76,123 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 32,326,604 பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.
மேலும், 312,685 பேர் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி, மொத்தம் 8,170,081 பேர் இப்போது இரண்டாவது தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில், தெற்கு லண்டன் பகுதிகளான வாண்ட்ஸ்வொர்த் மற்றும் லம்பேத்தில் விசேட சோதனை தொடங்கியது.
தென்னாப்பிரிக்க கோவிட் - 19 மாறுபாட்டின் டஜன் கணக்கான வழக்குகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இரண்டு பெருநகரங்களிலும் சுமார் 650,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்த ஒரு நபரிடம் முதல் வழக்கு கண்டறியப்பட்டதாக கருதப்படுகிறது. எனினும், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்.சி) முதல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு "ஒரு வீட்டுக் கொத்தணியின் ஒரு பகுதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 23 வழக்குகள் பதிவாகிய லம்பேத்தில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. இது வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள இரண்டு ஆரம்ப பாடசாலைகளுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.