ஜனாதிபதி செயலகத்தில் 30 பேருக்கும் மஹிந்தவின் செயலாளருக்கும் கொரோனா
ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாகத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் கந்தக்காடு, புனானை, களுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் சென்றுள்ள அதேவேளை, அங்கு சபை முதல்வரின் அலுவலக ஊழியர்கள் சிலருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார்.