பிரித்தானியாவில் தற்போதைய கோவிட் நிலவரம்! புதிய தரவுகள் வெளியாகின
வெளிநாடுகளில் இரட்டை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரித்தானியர்கள் விரைவில் இங்கிலாந்துக்குச் செல்ல முடியும் எனவும், வெளிநாடுகளில் நிர்வகிக்கப்படும் கோவிட் தடுப்பூசிகளை அங்கீகரிக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளின் படி, தேசிய சுகாதார சேவை மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே ஆபத்தான நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வந்தால் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியும்.
இரட்டைப் பிரஜைகள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அல்லது வேலை செய்யும் லட்சக்கணக்கான பிரித்தானிய குடிமக்கள் இன்னும் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் முதல் விதிகள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரித்தானியாவில் பதிவான புதிய கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 25,000 க்கும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 24,950 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது 15 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கோவிட் - 19 புதிய வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 5,722,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 129,172 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,133,895 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 715 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,459,231 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.