நாடாளுமன்றில் கொரோனா தொற்று! ஆளும் கட்சி அலுவலகத்துக்குப் பூட்டு
நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி பிரதம கொறடாவின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரட்ணவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்றத்திலுள்ள ஆளும் கட்சி அலுவலகமும், உறுப்பினர்களுக்குச் சேவை வழங்கும் அலுவலகமும் மூடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளருக்கும் ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ஆளும் கட்சி பிரதம கொறடாவின் செயலாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து ஆளும் கட்சி பிரதம கொறடாவின் செயலாளருடன் தொடர்புடைய அலுவலகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நாடாளுமன்ற அதிகாரிகள், அந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் மேலும் 400 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.