மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை 5 நபர்கள் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்று நபர்கள் மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரில் ஒருவர் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண். அவருடைய கணவர் வெளி மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மற்றைய நபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 14 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 31 நபர்கள் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் அடையாளம் காணப்பட்ட 14 பேரில் 11 பேர் எருக்கலம்பிட்டி பகுதியையும், ஒருவர் புதுக்குடியிருப்பு பகுதியையும், ஒருவர் காத்தான்குடி பகுதியையும், மேலும் ஒருவர் நிக்கரவெட்டிய பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் மன்னார் நகர் உப்புக்குளம் பகுதியில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட 114 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகளையும் எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள் அச்சமடையத் தேவை இல்லை என்ற போதும் மிகவும் அவதானமாகவும், குறிப்பாக நெருக்கமான குடியிருப்புக்கள், கடைகளில் இருப்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ள வேண்டும்.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை வெளியில் வர வேண்டாம்.
கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து எதிர் வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
குறித்த தடுப்பு மருந்தை அதிகம் பாதிக்கக்கூடியவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை இன்று காலை 10 மணியளவில் மன்னார் பஸாரில் ஒரு பகுதி இராணுவம் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைத்து குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், வர்த்தக நிலையங்களில் வேலை செய்கின்றவர்கள் என அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு மன்னார் புதிய பேருந்து நிலைய பகுதியில் வைத்து சுகாதாரத் துறையினரினால் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.