சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி
இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும், இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக அளித்துள்ளார்.
இது தொடர்பில், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ள அவர், அந்த தனியார் ஜெட் விமானத்தில் அவரது பெயரின் முதலெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் பதிவு எண் அவரது பிறந்த திகதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2017 முதல் சிறையில் அடைப்பு
“ நீங்கள் எப்போதும் படப்பிடிப்புக்காக உலகம் முழுவதும் பறக்கிறீர்கள், இப்போது இந்த ஜெட் விமானம் மூலம், உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்,” என்று சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தமது கடிதத்தில், குறித்த விமானத்துக்கு வரி செலுத்துவதாகவும், எனவே அதனை யாரும் சட்டவிரோதமானது என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
200 கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் பல குற்றங்கள் தொடர்பில், சுகேஷ் சந்திரசேகர் 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர் மொத்தம் 23 வழக்குகளில் தொடர்புடையவராக பெயரிடப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
