அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த இலங்கையரின் மரணத்தில் சர்ச்சை
அவுஸ்திரேலியாவில் தனது இரு பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இலங்கையரான இந்திக்க குணதிலகவின் மரணம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திக்காவின் நெருங்கிய நண்பர்கள், அவரது முன்னாள் மனைவியின் நண்பர்கள் மற்றும் அவர்களது அயலவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இந்திக்க குணதிலக்கவுக்கு காணப்பட்ட, அழுத்தம், குடும்பத்தின் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை செய்துக் கொள்வதாக கூறினார் என அவரது நண்பர் என கூறப்படும் நபர் வெளியிட்ட பதிவு ஒன்று அவுஸ்திரேலிய ஊடகங்களில் பதிவாகியுள்ளது.
“எனக்கு 3 அப்பாவி உயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. உயிரை விடப்போவதாகவும் அதற்கான திகதி கூறியிருந்த நிலையில், என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அனைவரையும் காப்பாற்றுமாறு கூறினேன்” என நண்பர் பதிவிட்டிருந்தார்.
அது மாத்திரமின்றி, இந்திகவின் வெளிநாட்டு மனைவி மற்றும் மனைவியின் தாயாரே இந்திகவின் மரணங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என இந்திக்கவின் இலங்கை நண்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திக்கவின் மனைவியும் மாமியாரும் இந்திக்கவையும் அவரது இரண்டு குழந்தைகளையும் மனரீதியாக கடுமையாக சித்திரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையில் பணியாற்றுவதாக கூறிக்கொள்பவர்கள் சட்டத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே இந்திக்க குணதிலக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தனக்கு எல்லாம் தெரியும் எனவும் அவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த சமூக ஊடகப் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திகவின் மனைவி தரப்பினர் மற்றும் அயலவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல அவுஸ்திரேலியர்கள், தற்கொலை செய்த இந்திக்க நாசீசிசம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.