சபாநாயகர் பதவியில் தொடர்வதற்கு ஜகத் விக்ரமரத்னவுக்கு எந்த அருகதையும் இல்லை! முஜிபுர் ரஹ்மான் விசனம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்ற சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பிலேயே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டம் பொதுவானது
ஊழல் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி விசாரணைகளுக்கு வழிவிட்டுத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே நியதியாகும். ஆனால், சபாநாயகர் இந்த ஆசனத்தில் தொடர்ந்தும் இருப்பது பிரச்சினைக்குரியதுடன் சட்டப்படியும் கேள்விகளை எழுப்புகின்றது.
நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் மேடைகளில் கூறியது இதனைத்தானே? சட்டம் அனைத்துக்கும் பொதுவானது என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு முரணாக நடப்பது ஏற்புடையதல்ல.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குச் சபாநாயகர் இடமளிக்க மறுத்தால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியல் கட்டளைகள் தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீங்கள் இவ்வாறான உரிமை விடயங்கள் தொடர்பில் கதைத்தவர்கள். உங்களால் சபாநாயகர் ஆசனத்தில் அமர்த்தப்பட்ட ஜகத் விக்ரமரத்ன இப்போது சர்வாதிகாரி போன்று நடக்கின்றார். எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு சர்வாதிகாரி போன்று நடந்துகொண்டதில்லை.

இதற்கு முன்னர் இந்தச் சபாநாயகர் ஆசனத்தில் இருந்தவரைச் சான்றிதழ் இல்லை எனக் கூறி நீக்கியது அநியாயமானது என்றே இப்போது தோன்றுகின்றது. சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அசோக ரன்வலையையே தொடர்ந்து அந்தப் பதவியில் வைத்திருந்திருக்கலாம்.
அல்லது, நடுநிலையாகவும் தகுதியுடனும் சபையைத் தற்போது நடத்திச் செல்லும் பிரதி சபாநாயகரைச் சபாநாயகராக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26