சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகை அகற்றப்பட்டது
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19ம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டடத்தில் சீன நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகம் அமைந்துள்ள பகுதிக்கான பெயர்ப் பலகையில் தமிழ் மொழி உள்ளக்கப்படவில்லை. மாறாக சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழியான மான்ட்ரின் ஆகிய மொழிகளில் பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சமூக ஊடங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட் அதேவேளை, சீனத் தூதரகமும் இத பற்றி பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், உடனடியாக நீதி அமைச்சர் அலி சப்ரியைத் தொடர்பு கொண்டு, இதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில்,உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் செந்தில்
தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.
குறித்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்படும் எனவும்,சீன மொழியிலான பெயர்ப் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர்ப் பலகை பொருத்தப்படும் எனவும் சட்ட மா அதிபரின் பேச்சாளர் நிசாரா ஜயரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

