கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமாக கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (18.11.2025) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் ஏற்பாட்டில், கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்து கொண்டவர்கள்.
இதில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வனவளத் திணைக்களத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், புவிச்சரிதவியல் மற்றும் கனியவளத் திணைக்கள அதிகாரிகள், கிராமமட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமாக விரைவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
சவால்களுக்கு தீர்வு
மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கல்லாறு கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு வழங்கும் முகமாக நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
மாவட்டத்தின் முக்கிய அரச திணைக்களங்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் இணைந்து இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுதலை தடை செய்யும் முகமாக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலதிக தகவல் - யது







