தொடர் சீரற்ற காலநிலை..! மீண்டும் அச்சத்தில் மூழ்கிய மலையக மக்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழையுடன் கூடிய கடும் காற்று வீசி வருகின்றது.
இதன் காரணமாக பல யபகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
போக்குவரத்து தடை
அதிலும் குறிப்பாக ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை, லிந்துலை, டிக்கோயா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகின்றது. அதனுடன் பலத்த காற்றும் வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதுடன், சில இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலவாக்கலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியில் மடக்கும்பர - புதுகாடு பகுதியில் பாரிய மரம் சரிந்து விழுந்ததால் அந்த வீதி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் மிகவும் அவதியுறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட்டக்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
எனவே ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய, எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri