கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பயணிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் செயலிழந்திருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இந்த செயலிழப்பால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு கவுண்டர்கள் இரண்டும் செயலிழந்தன.
இது சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான தாமதத்தையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள்
இந்த கணினி அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இதுபோன்று செயலிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் கணினி மெதுவாகச் செயல்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இதுபோன்ற பலவீனமான கணினி அமைப்புக்கு பதிலாக அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் கணினி அமைப்பின் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




