நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடரும் மரக்கடத்தல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்குமரங்கள் அறுத்து விற்பனை செய்யப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பல்வேறு தடவைகள் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டும் தொடர்ந்து தேக்கு மரங்கள் அறுக்கப்பட்ட வண்ணமே உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வனவள பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த தேக்கு மரங்கள் அறுத்து விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை தொடர்வதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்டிருந்த குறித்த தேக்கம் காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் குறித்த பகுதிகளிலிருந்து ஒரு பகுதி காடுகளில் அரசமர கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டு அங்கிருந்த தேக்கு மரங்கள் அகற்றப்பட்டு இருந்தது.
அத்தோடு குறித்த பகுதியைச் சேர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள தேக்கு மரங்களும் சட்டவிரோதமாக மர வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களால் அறுத்துச் செல்லப்பட்டு வந்தது.
குறிப்பாகக் குறித்த பகுதியில் தேக்கு மரங்கள் அழிக்கப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்ததோடு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத தேக்குமர வியாபாரம் தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்ற நிலையில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில் பாரிய அளவில் இடம்பெற்ற சட்டவிரோத தேக்குமர வியாபாரம் தொடர்பில் வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் இடம்பெற்று வருகின்ற காடழிப்பு தேக்குமர வியாபாரம் தொடர்பில் வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் உடந்தையாக செயற்பட்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த பகுதியில் இடம் பெறுகின்ற சட்டவிரோத மர கடத்தல்கள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலைமை இன்றும் தொடர்கின்றது.
குறிப்பாக இந்த நாகஞ்சோலை வனப் பகுதியிலேயே அண்மைய நாட்களில் 100க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டிருக்கின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அத்தோடு குறித்த பகுதியில் தொடர்ச்சியாக வனவள திணைக்களத்தினால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்ற போதும், அந்த பகுதியில் தொடர்ச்சியான மரக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக அங்கு இருக்கின்ற மரங்கள் அறுத்து விற்பனை செய்யப்பட்டதன் பின்னர் குறித்த மரம் அறுக்கப்பட்ட தடயங்களை அளிக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுவதாக அறியமுடிகிறது. அதனை விடவும் அங்கு பல்வேறு தேவைகளுக்காகவும் தேக்குமரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
எனவே இவ்வாறு தொடர்ச்சியாக இந்த தேக்கு மரங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடுகள் வளவள திணைக்கள ஆதரவுடனேயே இடம்பெறுவதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டதோடு, பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறுகின்ற காடழிப்பு செயல்பாடுகள் வனவள அதிகாரிகளின் ஆதரவுடனேயே பணம் படைத்தவர்களாலும் சட்டவிரோத மர கடத்தல் காரர்களாலும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை சுட்டிக் காட்டப்பட்டாலும் இன்றுவரை தீர்க்கமான ஒரு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமையே முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
