தொடரும் நிலநடுக்க அபாயம்!பேரழிவுகளை ஏற்படுத்தலாம்:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.
இந்த அதிர்வானது நிலநடுக்கமானியினால் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது.
3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும்.
அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நிலநடுக்கங்கள்
இதற்கமைய 2023 ஆம் ஆண்டு ஆரம்பமானதும் உலகளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவமாக துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய நிலநடுக்கம் மாறியது.
இதனை தொடர்ந்து உலகளவில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் மக்கள் இடையே ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது.
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.
துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி ஆகும்.
இதன்போது, ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் துருக்கியில் இன்னும் மீட்பு பணிகள் முடியவில்லை. அங்கு தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலநடுக்கம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது.
கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
கடந்த தினங்களில் பதிவான நிலநடுக்கங்கள்
இது இவ்வாறு இருக்க, இந்தியாவின்-குஜராத் மாநிலத்தில் நேற்று(26.02.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமைதான் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் நேற்று முன்தினம்(25.02.2023) கிழக்கு ஜப்பானின், ஹொக்டைடோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(24.02.2023) அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 97 கிமீ ஆழத்தில்,இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டு இருக்கிறது.
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் தஜிகிஸ்தானில் முர்கோப் பகுதியில் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் பைசாபாத்திலும் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதேபோன்று நேற்று முன்தினம் (25.02.2023) பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் நேற்று முன்தினம் (25.02.2023) 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் நேற்று முன்தினம் (25.02.2023) 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இலங்கையில் நிலநடுக்கம்
இதேவேளை துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.
இலங்கையில் இறுதியாக கடந்த புதன்கிழமை சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியிலேயே பதிவாகியிருந்தது.
இவ்வாறு கடந்த தினங்களில் துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இப்படி அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன.
இதேவேளை துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் தகடு அன்டோலியன் தகடு மீது நகர்ந்து உள்ளது. அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை தகடு நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் தகடுகளும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும்.
உலக அளவில் பதிவான நிலநடுக்கங்களால் வீடுகள் குலுங்கியுள்ளன. பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளன.ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
பாதிப்புக்கள்
மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் போன்று ஏனைய பகுதிகளில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன் தமது வீடுகள்,உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகளவில் புவியலாளர்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்கள் தொடர்பான தமது எதிர்வுகூறல்களை தெரிவித்துள்ளதுடன் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன,ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8 ஆக அதிகரிக்கும். முந்தைய நிலநடுக்கத்தை விட பல மடங்கு வலிமையானது. நாம் உணரும் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
எனவே நீங்கள் நிலநடுக்கத்தால் அதிர்வை உணர்ந்தால் கட்டடங்களில் தங்க வேண்டாம். சமவெளிகளில் பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கைக்கமைவாக எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் தாக்கத்தால் இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படுமா? அவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறான தாக்கங்கள் எற்படும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
