நாட்டில் தொடரும் போதைப்பொருள் கடத்தல்: பொலிஸாரின் நடவடிக்கை(Photos)
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவை தொண்டைமனாறு வீதி வளலாய்ப் பகுதியில் வைத்து இன்று(29) கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 31 மற்றும் 32 வயதுடைய மன்னார் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.
கடத்தல் நடவடிக்கை
இதன்போது கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹயர்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்த 51 கிலோ 500 கிராம் கஞ்சாவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வளலாய் கடற்பரப்பு ஊடாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்பில் தகவல் கிடைக்க பெற்று வந்திருந்ததன் அடிப்படையில் கடற்படையினர் இந்த கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று
அக்கரைப்பற்றில் இரு வேறு இடங்களில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று - வெள்ளப்பாதுகாப்பு வீதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இராசியத் தகவலின்படி குறித்த பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 35 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்றில் மற்றுமோர் இடத்தில் 45 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சந்தேகநபர்களும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக செய்தி-ராகேஷ்,கஜிந்தன்