கனடாவில் விஜய் தணிகாசலத்தால் விவாதப்பொருளாக மாறிய விடயத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்
கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ - றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம்.
இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104இனை கொண்டு வந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
மேற்படி சட்டமூலம் 104 ஆனது, முதலாவது விவாதத்தினை முடித்து இறுதி வாசிப்புக்காக ஒன்ராறியோ சட்டமன்ற மேற்சபையிடம் உள்ளது.
இச்சட்டமூலம் இறுதி வாசிப்பை முடித்து சட்டமாக நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியுடன் கூடிய ஒருவார காலம் ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக' அதிகாரப்பூர்வமாக ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படும்.
இதன்மூலம் ஒன்ராறியோவில் உள்ள அனைத்து இன மாணவர்களும் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு பற்றி அறிந்துகொள்ளவும், அங்கிருந்து தப்பி கனடாவில் வாழும் தமிழர்களும் அவர்களின் தலைமுறையினரும் எதிர்கொண்ட உளவியல் ரீதியிலான தாக்கங்களை உணர்ந்து கொள்ளவும், அவற்றுக்குத் தீர்வினைக் காண்பதற்கும் ஏதுவாக அமையும் என்பது இச்சட்ட மூலத்தின் குறிக்கோள்.
இவ்விடயம்தான் தற்போது இலங்கை அரச மட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள நாடாளுமன்றத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இலங்கை அரசின் முன்னாள் வடமாகாண ஆளுநரும், தற்போது இலங்கை பொதுஜன பெரமுன (மகிந்த ராஜபக்சவின்) கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் மிகவும் காட்டமான உரையொன்றினை கடந்த செவ்வாயன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றியிருந்தார்.
அதில் அவர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய்தணிகாசலத்தையும் , ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றும்போது,
"மேற்படி சட்டமூலமானது நடைமுறைக்கு வருமானால், ஒன்ராறியோவில் உள்ள 4800இற்கும் அதிகமான பாடசாலைகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' பாடமாகக் கற்பிக்கப்படும் என்பதுடன், இலங்கை அரசின் திட்டங்களுக்கும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன் எம்.பி.பி. விஜய் தணிகாசலம் அவர்கள் தனது சுய இலாபத்துக்காக அருவருக்கத்தக்க விதத்தில் இலங்கை விடயங்களைக் கையாள்கிறார்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உடனடியாக இலங்கைக்கும் கனடாவுக்குமான ஒரு நாடாளுமன்ற குழுவினை அமைத்துப் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர்களின் இப்படியான செயற்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர் கோட்டாபய அரசாங்கம் பதவியேற்றவுடன் நியாயமான முறையில் எம்.பி.யாக பதவியேற்றதுடன், கடந்த ஆண்டு கனடாவுக்கு வருகை தந்து பல சந்திப்புகளை மேற்கொண்டதுடன், இங்குள்ள தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.