இலவசமாக போதைப் பொருளை வழங்கி இலங்கையை அழிக்கும் சதித்திட்டம்
போதைப் பொருளை இலவசமாக வழங்கி இலங்கையை சர்வதேச ரீதியில் அழிக்கும் சதித்திட்டத்தில் ஏதோ ஒரு குழு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் வெளியிடும் இந்த சர்ச்சைக்குரிய விடயம் சம்பந்தமாக எப்போதும் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையை அழிக்கும் சதித்திட்டம், ஆனால் என்னிடம் ஆதாரங்கள் இல்லை
போதைப் பொருளால் இலங்கை அழிக்கும் சதித்திட்டம் இருப்பதாக நான் கூறுவதை நிரூபிக்க என்னிடம் தற்போது ஆதாரங்கள் இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் இலங்கை பாரதூரமான சம்பவங்களை எதிர்நோக்க நேரிடும்.
இப்படியான சதித்திட்டத்தில் ஈடுபடுவோர் ஹைய்டி நாட்டுக்கு பியரை வழங்கி அந்நாட்டு மக்களின் ஆயுளை 30 ஆக குறைத்து, நாட்டின் வளங்களை சுரண்டினர்.
பியர் அருந்துவதன் மூலம் 30 ஆண்டுகள் வரை வாழ முடிந்த போதிலும் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவரின் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே.
சில பொலிஸார் மற்றும் சில அரசியல்வாதிகள் போதைப் பொருள் வியாபாரத்திற்கு உதவி வருகின்றனர். இதனால், அதனை ஒடுக்குவதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்படியான சம்பவங்களுடன் தொடர்பில்லாத பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் போதைப் பொருள் வியாபாரத்தை ஒடுக்க மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் சம்பந்தமாக அவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் இரண்டு ஆண்டுகளில் மரணிப்பார்
இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் விஷப் போதைப் பொருளான ஐஸ் என்ற போதைப் பொருள் இலங்கைக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
குறைவான விலையில் கிடைக்கும் இந்த போதைப் ஹெரோயின் போதைப் பொருளை விட வீரியம் கொண்டது எனவும் இதற்கு அடிமையானவர்கள் இரண்டு ஆண்டுகளில் மரணிப்பார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.



