பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து பயணங்கள் ஆரம்பிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய திட்டம்
மேலும், நான்கரை மணி நேர பயணத்திற்குப் பின்னர், பேருந்து ஓட்டுநருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓய்வு நிறுத்தம் வழங்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனமடுவ, கொழும்பு - எலுவான்குளம் மற்றும் கொழும்பு - கல்பிட்டி ஆகிய மார்க்கங்களில் இந்த ஒருங்கிணைந்த நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு - மன்னார், கொழும்பு - தலைமன்னார், கொழும்பு - குளியாப்பிட்டி, கொழும்பு - நிக்கவரட்டிய, கொழும்பு - அநுராதபுரம், கொழும்பு - வவுனியா, கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை, கொழும்பு - காரைநகர் மற்றும் கொழும்பு - துனுக்காய் ஆகிய பகுதிகளுக்கும் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.



