பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவை பரிந்துரைத்துள்ள பொதுஜன பெரமுன
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சு பதவிகள் மற்றும் ஏனைய பதவிகள் பகிரப்படுவது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், பிரதமர் பதவிக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி நேற்று யோசனை முன்வைத்தார்.
பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரை
இதன்படி அனைவரிடமும் யோசனைகளை பெற்று பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பரிந்துரைத்துள்ளது.
தினேஷ் குணவர்தன பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தின் அவை முதல்வர் பதவிக்கு நிமல் சிறிபால டி சில்வா அல்லது சுசில் பிரேமஜயந்த ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பிரசன்ன ரணதுங்க தொடர்ந்தும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக பதவி வகிப்பார்.
அதேவேளை அமைச்சரவையும் துரிதமாக நியமிக்கப்படவுள்ளதுடன் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படவுள்ளதுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையும் 30 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் எமது கட்சி தலையிடாது
அதேவேளை புதிய அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் பொதுஜன பெரமுன தரப்பினரின் தலையீடு இருக்குமா என நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச,
“இல்லை நாங்கள் அப்படியான முடிவுகளை எடுக்கவில்லை. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு நான் இணங்குனே். எமது கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அமைய நான் செயற்படுவேன்” எனக் கூறியுள்ளார்.