வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குழப்பம்! - அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 150 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அது ஒரு பிழை காரணமாக 148 எனக் கணக்கிடப்பட்டதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருந்த போதும் கணக்கெடுப்பின் போது இடம்பெற்ற தவறினால் ஆதரவாக 148 வாக்குகள் கிடைத்ததாகவே அறிவிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜெயரத்ன ஹேரத் ஆகியோரின் வாக்களித்த போதிலும் அந்த வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதது பின்னரே அறியவந்தது எனவும், இதனால் வாக்குகளின் எண்ணிக்கை 148 என கூறப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வாக்குகளை எண்ணுவதில் இதுபோன்ற தவறு ஒரு தீவிரமான விஷயம் என்றும் அது எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.