மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் கைது
மண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்ட போது தவிசாளருக்கும், ஊர் பொதுமக்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஐயன்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று செங்கலடி ஐயன்கேணி மணியபுரம் பகுதியில் பிரதேச செயலகத்தால் வெள்ளம் வழிந்தோடுவதற்காக வெட்டப்பட்ட வாய்க்காலில் இருந்து மண் தோண்டப்பட்டது.
இதன்போது, குறித்த மண்ணை வட்டார உறுப்பினர்களுக்கோ, அல்லது கிராம அபிவிருத்திச் சங்கம், ஊர் மக்களுக்கு தெரியாமல் தனது ஊரான சித்தாண்டி பகுதிக்கு கொண்டு செல்லும் போது அந்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தடுத்தனர்.
கைது
இதனையடுத்து, அதனை சாரதி கிராம வீதிக்கு போடுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பிரதேச சபை வாகன சாரதியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என கூறி மணல் ஏற்றுவதை தடுத்த ஐயன்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளருமான பாஸ்டர் திருச்செல்வம் என்பவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து செங்கலடி ஐயன்கேணி வட்டா தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபையின் உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
வட்டாரத்தில் உள்ள இரண்டு உறுப்பினர்களுக்கும் அறிவிக்காது சம்பவ இடத்தில் தவிசாளரோ, வட்டார உறுப்பினர்களோ இல்லாத நிலையில். பிரதேச செயலகத்தின் அனுமதி இல்லாமல், ஊர் மக்களுக்கோ கிராம அபிவிருத்தி சங்கத்திற்கோ அறிவிக்காமல் மணலை ஏற்றி செல்ல முற்பட்டதாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஏன் தவிசாளர் இந்த விடயங்களை யாருக்கும் அறிவிக்காமல் மூடி மறைத்து செய்ய வேண்டும். இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் வாக்களித்து தெரிவு செய்த வட்டார உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர் இந்த மண்ணை தனது ஊருக்கு ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளார் என்பதனாலேயே இந்த ஊர் மக்களும், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினரும் அதனை தடுத்துள்ளனர்.
முழுமையான விசாரணை
சம்பவ இடத்தில் வட்டார உறுப்பினர்களோ, தவிசாளரோ இருந்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. பிரதேச சபை தவிசாளர் வட்டார உறுப்பினர்களுக்கு தெரியாமல் தன்னிச்சையான மண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டு அதில் பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது பொலிஸாரால் முறைப்பாடு செய்து கிராம அபிவிருத்தி சங்க தலைவரை கைது செய்ய தூண்டி உள்ளார்.

இது ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரின் அதிகார துஷ்பிரயோகம். தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதனை வட்டார உறுப்பினர்களோ, கிராம அபிவிருத்தி சங்கமோ, கிராம மக்களோ கேள்வி கேட்க முடியாது என்றால் இந்த பிரதேச சபை யாருக்கானது.
ஒரு கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கு மட்டும் தான் பிரதேச சபையா, தவிசாளரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு பொலிஸாரும் துணை போகின்றார்களா என்ற கேள்வி எழுகிறது. எனவே இது குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.