யாழிலுள்ள எரிவாயு விநியோக நிலையத்தில் முரண்பாடு: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார் (Video)
யாழ்ப்பாணம் - பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயு பெற வந்த பொதுமக்களுக்கும் எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து கோப்பாய் பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்று இரவு பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு வந்திறங்கியதாக பொதுமக்களுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை முதல் குறித்த எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் எரிவாயு பெறுவதற்கு ஒன்று கூடி இருந்தனர்.
இந்நிலையில் எரிவாயு விநியோகஸ்தர் எரிவாயு இல்லை என தெரிவித்த போது பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது எரிவாயு கொள்கலன்கள் இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.