நாடு கடத்தல்களை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் வீடுகள், சந்தைகள் மற்றும் பணியிடங்களை குறிவைத்து 24 மணி நேரமும் பொலிஸார் சோதனை நடத்தி வருவதால், அங்குள்ள ஆப்கானிஸ்தான் குடியேற்றவாசிகளை இலக்கு வைத்து கைதுகள் மற்றும் கட்டாய நாடுகடத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சமீப நாட்களாக இந்த அடக்குமுறை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில், நாங்கள் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கிறோம் என்றும், பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது தமது உயிரை இன்னும் பெரிய ஆபத்தில் ஆழ்த்தும் எனவும், அங்குள்ள ஆப்கானிஸ்தான் குடியேறிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க தரப்பு
இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான் தூதரகம் இதுவரை 800 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதோடு , இது "தன்னிச்சையானது" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர்களில், 137 நபர்கள் தங்கள் விசாக் காலத்தை மீறி தங்கியிருந்ததாகவும், மற்றும் நீட்டிப்புக்காக காத்திருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க சிறப்புத் தூதர் கலீல்சாட் (Khalilzad) ஆப்கானிஸ்தானிய அகதிகளை நாடு கடத்துவதையும், தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கான் அகதிகளை சட்டவிரோதமாக துன்புறுத்துவதையும் வெளியேற்றுவதையும் நிறுத்த வேண்டும் என்று கலீல்சாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலைமை குறித்து எச்சரிக்கை
மனித உரிமை ஆர்வலர்களும் இந்த நிலைமை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 15, 2023 தொடக்கம், டிசம்பர் 15, 2024 க்கு இடையிப்பட்ட காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 800,000 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மில்லியன் ஆப்கானிய குடியேற்றவாசிகளை தானாக முன்வந்து அல்லது பலவந்தமாக திருப்பி அனுப்புவதற்கான தனது விருப்பத்தை பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடுகடத்தல்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே கடுமையான மனிதாபிமான நெருக்கடியை அதிகப்படுத்துவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் ஜமியத்-இ-இஸ்லாமி கட்சி, தலிபான்களை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மில்லியன் கணக்கானவர்களை கட்டாயப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியதற்காக குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து வரும் சூழலில் தற்போது கடுமையாக மோதி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ. தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்துக்கும் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இன்னும் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் இருநாட்டின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் இராணுவம்
தற்போதைய சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தை விட டிடிபி அமைப்பினரின் கைகள் ஓங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாலிபான்களை பார்த்து பாகிஸ்தான் இராணுவத்தினரும் விலகி செல்வதாக கூறப்படுகிறது.
அதாவது பாகிஸ்தான் இராணுவத்தை விரட்டி சில இராணுவ நிலைகளை டிடிபி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
டிடிபி அமைப்பு
இந்த டிடிபி அமைப்பின் பிரதான நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானை போல் பாகிஸ்தானிலும் தாலிபான்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதோகும்.
இதற்கு முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க வேண்டும்.
இதனை இலக்காக வைத்து தற்போது டிடிபி அமைப்பு பாகிஸ்தானுடன் மோதலை தொடங்கி உள்ளது எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |