நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி:தினேஷ் ஷாப்டரின் காரிற்கு அருகிலிருந்து சென்றவர் யார்..! வெளிவரும் பல உண்மைகள்
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் இறந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், ஷாப்டரின் மரணத்தில் உள்ள மர்மத்தை இன்னும் குற்றப் புலனாய்வுத் துறையால் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் காரில் கைகள் கட்டப்பட்டு,கழுத்து நெறிக்கப்பட்ட நிலையிலிருந்த ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவிய கல்லறைத் தொழிலாளியின் தகவலுக்கமைய தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தினேஷ் ஷாப்டரை கொலை செய்வதற்கு முயற்சித்த இடத்திலிருந்து பெறப்பட்ட உபகரணங்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொரளை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்ட குறித்த உபகரணங்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று(30.12.2022) நீதிமன்றில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அதற்கமைய, புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மயான ஊழியரின் கருத்து
இதேவேளை தினேஷ் ஷாப்டர் காரில் இருந்தபோது அந்த இடத்தை விட்டுச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் தொடர்பில் மயான ஊழியர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காருக்கு அருகில் நின்றிருந்த குறித்த நபர் ஒல்லியான உயரமானவர் எனவும் அவர் காருக்கு அருகாமையில் இருந்து மயானத்தின் பின்பகுதியில் உள்ள சுடுகாடு நோக்கி சென்றதாகவும் மயான ஊழியர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த நபரை மீண்டும் கண்டால் அடையாளம் காண முடியும் எனவும் மயான ஊழியர் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
100 பேரிடம் வாக்குமூலம்
தினேஷ் ஷாப்டரை அவரது நெருங்கிய நிர்வாகிமற்றும் இரண்டு கல்லறைஊழியர்கள் மட்டுமே கல்லறையில் காருக்குள் பார்த்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொரளை பொலிஸார் அவர்களிடம் ஆரம்ப வாக்குமூலங்களைப பதிவு செய்துள்ளதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களாக மேலதிக வாக்குமூலங்களைப பதிவு செய்துள்ளனர்.
இதற்கமைய ஷாப்டரின் மரணம் தொடர்பில் 100 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலங்களைப் பெற்றவர்களில் ஷாப்டரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் அடங்குவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



