மங்களவின் வெற்றிடத்தை மீள்நிரப்ப முடியாது! - சம்பந்தன் இரங்கல்
மங்களவின் வெற்றிடத்தை மீள்நிரப்ப முடியாது! - சம்பந்தன் இரங்கல்
மீள் நிரப்ப முடியாத வெற்றிடத்தை மங்கள சமரவீரவின் மரணம் ஏற்படுத்தியுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பானது கவலைக்குரியது.
உண்மையான ஓர் இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்ல வேண்டும் என விரும்பிய ஒருவராவார்.
தனது வாழ்விலும் அரசியல் வாழ்க்கையிலும் இந்தக் கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்ததுமல்லாமல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தக் கொள்கைகளில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.
மங்களவின் மரணமானது, இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கை மக்களும் உண்மையான கொள்கைகள் உள்ள ஒரு தலைவரை இழந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. அன்னாரோடுடனான எனது உறவு மிகவும் நெருக்கமான ஒன்றாகும்.
இந்த இழப்பால் நான் மிகவும் வேதனையடைகின்றேன். மீள் நிரப்பமுடியாத வெற்றிடத்தை இவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது. கொள்கைகளுக்காக முன்னின்ற ஒரு உற்ற நண்பனை இழந்துள்ளேன்.
இந்தக் கவலைமிக்க நேரத்தில் அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்றுள்ளது.
தமிழ்த் தேச மக்களின் விடுதலைக்காக குரல் எழுப்பியவரை இழந்துவிட்டோம்! மாவை சேனாதிராஜா
மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் - அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"மங்கள சமரவீரவை நாடு இழந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். இவ்வாறு தொடர்ச்சியாகப் பல திங்களாக கொரேனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலட்சக்கணக்கில் உயிருக்குப் போராடும் மனிதகுலத்தின் ஈனக்குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் - அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர்.
இவ்வாறு செயற்பட்டு வந்த மனித நேயமிக்க ஓர் அரசியல் தலைவனை ஜனநாயகம், மனிதாபிமானம், விடுதலைக்காக ஏங்கி நிற்கும் மக்கள் இழந்து நிற்கின்றார்கள் என்கின்றபோது நாம் நெஞ்சாரத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம்.
மங்கள சமரவீரவை ஒரு பௌத்த சிங்களத் தலைவனாக நாம் பார்த்ததில்லை. அவர் அவ்வாறு செயற்பட்டதும் இல்லை. போரினால் அழிந்துபோன தமிழர் பிரதேசத்தையும் சீர்குலைந்துபோன மக்களையும் அரவணைத்து மீண்டும் வாழ்வு பெறவும், உரிமை பெறவும் மங்கள முன்னின்று செயலாற்றியமையை நினைவுகூருவோம்.
பௌத்த சிங்களத் தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் மங்கள சமரவீர தவறவில்லை என்பதைக் கூறுவோம். பௌத்த சிங்களத் தீவிர சக்திகள் மங்களவைத் திட்டித் தீர்த்தமையை அறிவோம்.
நாள்தோறும் கொரோனா வைரஸ் கொடுமையால் உயிர்ப்பலி கொடுக்கும் மக்களில் இலங்கைத் தீவில் மனித நேயமிக்க ஒரு அரசியல் தலைவனை இழந்துவிட்டோம் என்பதுதான் இன்றைய முக்கிய செய்தி ஆகும்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இழந்துபோன கௌரவத்தை - ஜனநாயகத்தை - நீதியை ஐ.நா மன்றத்திலும் உலகத் தலைவர்கள் மத்தியிலும் மீட்டுப் பெரும் மேன்மையைப் பெற்றவர் மங்கள சமரவீர.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை நிலைநாட்டிய நட்சத்திரமாய், தலைவனாய் விளங்கிய மங்களாவை இழந்து தவிக்கின்றோம் என்பதையும் பதிவு செய்கின்றோம்.
மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரு மகத்தான தலைவனை, தென்னிலங்கையில் ஜனநாயக நட்சத்திரத்தை இழந்த அனைவருடனும் அன்னார் ஆத்ம சாந்திக்காக நாமும் இணைந்து பிரார்த்திக்கின்றோம். அஞ்சலி செலுத்தி நிற்கின்றோம்" - என்றுள்ளது.
உண்மையான ஜனநாயகவாதியை திடீரென இழந்துவிட்டது இலங்கை! - மங்களவுக்கு சுரேஷ் இரங்கல்
"முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உண்மையான ஜனநாயகவாதி. அவரை இலங்கை இன்று திடீரென இழந்துவிட்டது. இந்த நாட்டுக்கு அவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றபோது அவரைக் கொரோனா காவுகொண்டது இலங்கைக்குப் பேரிழப்பாகும்."
இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"மங்கள சமரவீரவும் நானும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் பிறந்து ஒரே காலத்தில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை நெருக்கமான உறவுகளைப் பேணுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் இருவரும் உளத்தூய்மையுடன் செயற்பட்டு வந்தோம். மங்கள சமரவீர சிங்கள மேலாதிக்க கடும்போக்காளர்கள் மத்தியில் ஒரு மானுடனாக சகல இன மக்களைப் பற்றிச் சிந்தித்தவர்.
அன்னாரின் தந்தை ஒரு இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால் மங்கள சமரவீரவும் இனத்துவேஷம் இன்றி, இலங்கை ஒரு பல்லின மக்கள் வசிக்கும் நாடு என்பதை ஏற்று அனைவரும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி அதற்காக கடினமாக உழைத்து வந்தார்.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழுகின்ற மாத்தறை பாராளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த போதிலும் இனவேறுபாடின்றி தமது கடமைகளை முன்னெடுத்திருந்தார். பழகுவதற்கு இனியவர். ஒரு நேர்மையான அரசியல்வாதி.
இந்த நாட்டுக்கு அவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றபோது அவரைக் கொரோனா காவுகொண்டது இலங்கைக்குப் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவுத் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" - என்றுள்ளது.
பேரினவாதச் சேற்றில் மலர்ந்த வெண்தாமரையே மங்கள! - அனுதாபச் செய்தியில் ஐங்கரநேசன் தெரிவிப்பு
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை.
மொழியுரிமை உரியவாறு வழங்கப்படாத நிலைமையிலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள் எனத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை."
இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அனுதாபத் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"மங்கள சமரவீர பிற்காலத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி கட்சி அரசியலைத் தாண்டி கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இக்காலப்பகுதியில் தன்னைத்தானே சுயபரிசீலனை செய்பவராக விளங்கிய இவர், நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து தான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் அரசுகளும் இனவாதத்தை ஆதரித்த வாக்காளர்களும் பொறுப்புக்கூற வேண்டும் அரசு, எதிர்க்கட்சி, பேரினவாதம் உள்ளிட்ட அனைத்துமே தோல்வியடைந்து விட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது.
இது தற்போது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரமே வழங்கக்கூடிய வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்று தெரிவித்த மங்கள சமரவீர, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் இதயசுத்தியுடன் உழைத்தவர் ஆவார்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது முன்னெடுத்த புதிய அரசியல் யாப்பை சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க வெள்ளைத் தாமைரை இயக்கத்தினூடாகக் கடுமையாக உழைத்திருந்தார்.
தற்போதைய அரசு ஏனைய பலம்வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச் சீனாவுடன் மாத்திரம் நெருங்கிப் பயணிப்பதால் வருங்காலத்தில் பூகோள அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி நேரிடும் என்று எச்சரித்த மங்கள சமரவீர சீனாவுடனும் இந்தியாவுடனும் இலங்கை சமாந்தரமான நெருக்கத்தைப் பேணுவது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டி வந்தார்.
நாடு பேரினவாதச் சகதியிலும் கொரோனாவின் கோரப்பிடியினுள்ளும் சிக்கித்தவிக்கும் நிலையில் மங்கள சமரவீரவை கொரோனா பலிகொண்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆத்மா இயற்கை அன்னையின் மடியில் சாந்தியடையட்டும்" - என்றுள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
