சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ள நிபந்தனை
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியிலிருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு தற்போது நடந்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
''முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இயக்கும் குழுவினர், தற்போது தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று, வரப்பிரசாதங்களை வழங்கி, மீண்டும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதிய விவசாய இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நேற்று முன்தினம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதற்குக் கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 5 ஆம் திகதி, அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவும் உள்ளடங்கியிருந்தார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியிலிருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை நடத்தத் தயார்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி முதலான கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது கூறியுள்ளார்.