தடுப்பூசி உற்பத்தியாளர் நிறுவனம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனை
இலங்கை அரசாங்கம், மில்லியன் கணக்கில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ள சீனாவின் கோவிட் தடுப்பூசி உற்பத்தியாளர் நிறுவனம், இலங்கையிடம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த தகவலை சீன நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளை இலங்கைக்கு தருவிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் கெலுன் லைஃப் சயின்ஸ் கொம்பனி லிமிடெட்டின் தலைவரான நடராஜா என்பவரை கோட்டிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தடுப்பூசியின் விலையை எவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது. அத்துடன் இந்த கொள்முதல் விலை விடயம் பொதுவில் பேசப்பட்டால் கூட, இலங்கையுடனான உடன்படிக்கை முடக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பில் லைஃப் சயின்சஸ் (பிரைவேட்) லிமிடெட் தலைவர் நடராஜா, 2021, ஜூன் 13 ஆம் திகதி அன்று இலங்கையின் மருந்துகள் உற்பத்தித் துறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ பெயர் "கோவிட்வாக்" எனினும் இது பொதுவாக சினோவாக் கோவிட் -19 தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.
சினோவாக் லைஃப் சயின்சஸ் என்பது பீய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோவாக் பயோமெட்டின் பிரிவாகும் என்று நடராஜா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றும் ஒரு சீன தடுப்பூசியான சினோபார்ம், இலங்கைக்கு ஒரு குப்பி 15 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யபட்டுள்ளது.
இது பங்களாதேசுக்கு விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் 5 டொலர் (அமெரிக்க டாலர் 10 டாலர்) அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டநிலையில் அது இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்தே புதிய தடுப்பூசி தொடர்பில் சீன நிறுவனம் நிபந்தனையை விதித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது ட்விட்டர் செய்தியில், இது அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் பொதுவான நடைமுறையாகும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கை மிக விரைவான விநியோகத்துடன் சிறந்த விலையைப் பெறுவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் டாக்காவில் உள்ள சீனத் தூதரகத்தை மேற்கோள் காட்டி, பங்களாதேஷின் விலை நிர்ணயம் உள்ளிட்ட கொள்முதல் உடன்படிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் விலை வேறுபாடு தொடர்பில், சமூக ஊடகங்களில் போலி செய்திகள் வெளியானதாகவும் என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.




