மலையகத் தமிழர்களை இழிவுபடுத்துவது மனித உரிமை மீறல் - அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்
மலையகத் தமிழர்களை ‘கள்ளத்தோணி’ என இழிவுபடுத்துவது மனித உரிமை மீறல் எனத் தெரிவித்துள்ள சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இவ்வாறான இனவாதக் கருத்துக்களை வெளியிடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவரால் இன்று (09.10.2026) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும், மலையகத் தமிழர்களும் இலங்கை பிரஜைகளே. அவர்களின் மூத்த தலைமுறையினர் சிந்திய வியர்வை, அவர்களின் உடல் உழைப்பு மட்டுமல்ல உயிர் தியாகத்தாலும் உருவானதே மலையகம் எனும் அழகிய பொருளாதார தேசம். அத்தேசம் அவர்களுக்கு சொந்தமானது.
மனித உரிமை மீறல்
அம் மண்ணில் இன்றும் நாட்டுக்கு உழைத்துக் கொடுக்கும் தொழிலாளியை பார்த்து நுவரெலியா லிவர் ஸ்லீப் தோட்ட உதவி முகாமையாளர் "கள்ளத்தோணி" என விழித்தமைக்குப் பின்னால் வன்மம் கலந்த அதிகாரத்தொனியும், பேரினவாத அரசியலுமே உள்ளது. இத்தகைய வார்த்தை பிரயோகத்தின் மூலம் மலையக தொழிலாளர் வர்க்கத்தை இழிவுபடுத்தி அவமானப்படுத்தியமை மனித உரிமை மீறலுமாகும்.
இதனை மலையக சமூக ஆய்வு மையம் வன்மையாக கண்டிப்பதோடு தோட்ட நிர்வாகம் உடனடியாக அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும்; நேரடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களுக்கும் நீதியை பெற்று கொடுக்குமாறு அரசாங்க உட்பட அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றது.
இதற்கு முன்னர் மிக அண்மையில் அமா எதிரி சிங்க என்பவர் " மலையகத் தொழிலாளர்கள் கழிவறைகள் சுத்தம் செய்யவும், தேயிலை பறிக்கவும் வந்தவர்கள்" என சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்து இழிவுபடுத்தி இருந்ததையும் அனைவரும் அறிவர். மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தி, அவமானப்படுத்தி தாழ்வாக நோக்கும் மனப்பான்மை நாட்டின் பேரினவாத அரசியலால் காலாகாலமாக வளர்க்கப்பட்டதே.

தற்போது தண்டனை கைதியாக சிறை வாசம் அனுபவிக்கும் ஞானசார தேரரும் "கள்ள தோணிகள் அனைவரையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்" என தம்மை சிங்கமாக்கி கர்ஜனை செய்ததையும் எம்மால் மறக்க முடியாது. தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் "வளமான நாடு, அழகான நாடு"என மேடை தோறும் கூறிக் கொண்டிருக்கையில் வளமான அழகான நாட்டை உருவாக்க இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து வரும் மலையக தமிழ் உழைக்கும் வர்க்கத்தினரை நோக்கி தரக் குறைவாக நினைத்து இழிவான வார்த்தை பிரயோகம் செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதுவே வளமான அழகான நாட்டைக் கட்டி வளர்க்க உதவும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையில் பௌத்தம் உட்பட பிரதான மதங்கள், நாட்டின் பிரதான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, சடங்காச்சார சம்பிரதாயங்கள் ஏன் உணவு பழக்கவழக்கங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதை அடியொற்றியே உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வரலாறு தெரியாதோரின் அறிவீன கூற்று
இதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவும் முடியாது. அது மட்டுமல்ல தம்மை உண்மையான சிங்கள பௌத்தர்கள் என்றும் தேசப் பற்றாளர்கள் எனவும் அடையாளப்படுத்தி வீரம் பேசும் பலரின் குடும்பப் பெயர்கள் அனைத்தும் அன்னியம் கலந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. மேலும் இந்த நாட்டில் மலையகத் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் உட்பட அனைவரும் வந்தேறி குடிகளே. இதில் இறுதியாக வந்தவர்களே மலையகத் தமிழர்கள்.
இவர்களை மட்டும் கள்ளத்தோணி என்பது நாட்டின் வரலாறு தெரியாதோரின் அறிவீன கூற்று என்றே குறிப்பிடல் வேண்டும். நாட்டில் எத்தனை நூற்றாண்டு காலம் வாழ்ந்தோம் என்பதை விட நாடு செழிக்க என்ன செய்தோம்? என்பதே முக்கியமானது. அந்த வகையில் நாட்டை பொருளாதாரத்தில் வளர்க்கவும், அபிவிருத்தி அடைய செய்வதிலும், அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுப்பதிலும் பெரும் பங்காற்றி வருபவர்கள் மலையக தமிழ் உழைக்கும் வர்கத்தினராவர்.
தற்போதும் நவீன இனவாத அடிமைத்தனத்துக்கு மத்தியிலும் நாட்டுக்காகவே உழைத்து கொடுப்பவர்கள் கௌரவிக்கப்பட வேண்டிய நிலையில் அவர்களை நாட்டுக்கு அந்நியமான வர்கள் என விழிப்பதையும் அத்தகைய சிந்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் இனவாத கருத்துக்கள் தெரிவிப்போர் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே வளமான அழகான நாட்டை கட்டி எழுப்ப முடியும் எனக் கூறுவதோடு; நாட்டின் நலன் சார் மனித உரிமை அமைப்புகள், சமூக நிறுவனங்கள் மலையகத் தமிழர்களின் நிலையான வாழ்வுக்கு நிலம் சார்ந்த வாழ்வு உரிமையினை பெற்றுக் கொடுக்க குரல் கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam