எதிர்க்கட்சிகளின் விரிவான கூட்டணி - பேச்சுவார்த்தை ஆரம்பம்
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் இணைந்து விரிவான தேசிய கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக அரசியல் பழிவாங்கல்கள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஜனாதிபதி ஆணைக்குழு என்பன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அரசியல் கட்சிகள் விரிவாக கலந்துரையாடியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவரது அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடமையாற்றிய முன்னாள் நீதியரசரின் சட்டத்தரணி பதவியை இரத்துச் செய்வதற்காக பிரதம நீதியரசருக்கு 10 ஆயிரம் கடிதங்களை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணி அடுத்த மாதம் கொழும்பில் பேரணியை ஒன்றை நடத்தி மக்களை தெளிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விரிவான கூட்டணியை உருவாக்க ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜித சேனாரத்ன விசேட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



