சுதந்திரபுரம் தங்கம் அகழ்வு பணி நிறைவு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி நிறைவிற்குக் கொண்டுவந்துள்ளதுடன், இரண்டு குழிகளையும் தோண்டியவர்கள் யார் என்று அது தொடர்பில் நீதிமன்ற விசாரணை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டு உத்தரவிற்கமைய தோண்டும் நடவடிக்கைகள் கடந்த 03.12.21 திகதி தொடக்கி வைக்கப்பட்டது.
குறித்த அகழ்வு நடவடிக்கை 04.12.21 ஆம் திகதியும் மேற்கொள்ளப்பட்டு இயந்திரங்கள் புதைந்த காரணத்தினால் 06.12.21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர்,மருத்துவமனை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்குப் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிலையில் தோண்டப்பட்ட கிடங்குகளில் தண்ணீர் நிரம்பிக் காணப்படுவதால் தண்ணீரினை இறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு சுமார் பத்து அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் மாலை 5.15 மணியளவில் அகழ்வு பணியினை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிறைவிற்குக் கொண்டு வந்துள்ளதுடன், இதன்போது எடுக்கப்பட்ட சில சான்று பொருட்களை மன்றில் பாரப்படுத்துமாறும் இரண்டு குழிகளையும் தோண்டியவர்கள் யார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.



