இஸ்ரேலிய படையினருக்கு எதிராக இலங்கை உட்பட்ட 50 நாடுகளில் போர்க்குற்ற முறைப்பாடுகள்
இஸ்ரேலிய படையினர் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 50 முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இதுவரை எந்த கைதுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான KAN தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகள்
இந்தநிலையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளின் பெயர்களையும் குறித்த ஊடகம் குறிப்பிடவில்லை.
இருப்பினும், தென்னாப்பிரிக்கா, இலங்கை, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இஸ்ரேலிய வீரர்கள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இஸ்ரேலிய நாளிதழ் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இராணுவத்தின் தகவல் பாதுகாப்புத் துறையை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய வீரர்கள் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதை ஆவணப்படுத்தும் சமூக ஊடக தளங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 மில்லியன் பதிவுகளை வெளியிடுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது
அறிவுறுத்தல்கள்
இந்தநிலையில், குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணத்தைத் தடை செய்ய அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பிரேசிலில் விடுமுறையில் இருந்த இஸ்ரேலிய ரிசர்வ் படை வீரர் ஒருவர், காசாவில் போர்க்குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட பின்னர், அந்த நாட்டை விட்டு வெளியேறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.