சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இரண்டு சர்வதேச அமைப்புகளில் முறைப்பாடுகள்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இரண்டு சர்வதேச அமைப்புகளில் முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி சார்பில், இந்த முறைப்பாடுகளைத் தாம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கம் ஆகியவற்றில் இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டதாகவும், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த நாடாளுமன்ற சங்கங்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் கவிந்த ஜயவர்தன மேலும் கூறியுள்ளார்.
முக்கியக் குற்றச்சாட்டுகள்
தற்போதைய சபாநாயகர் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்காத விதத்தில் செயற்பட்டுள்ளதாக அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய பல விடயங்கள் முறைப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன. முறைப்பாட்டில் உள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:
• எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாமை.
• சபாநாயகர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறும் வகையில் செயற்பட்டமை.
• பாதுகாப்புப் பிரதி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, நியாயமான காரணங்கள் இன்றி நிராகரித்தமை ஆகிய விடயங்கள் குறித்த முறைப்பாட்டில் உள்ளடங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




