சபாநாயகரை உடனடியாக கைது செய்யுமாறு சீ.ஐ.டி.யில் முறைப்பாடு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவ ஜனதா பெரமுண கட்சியின் தலைவரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோன் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்
அவரது முறைப்பாட்டில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லம், தற்போதைக்கு அவரது பயன்பாட்டுக்கு அன்றி வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. அது அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தாபன விதிக்கோவைகளின் பிரகாரம் பட்டியலிடப்பட்ட முக்கிய சொத்துக்களில் ஒன்றாகும்.
அதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படியான நிலையில் தற்போதைக்கு சபாநாயகரின் இல்லம் நாடாளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுக்காக பயன்படுத்தப்படுவது துஷ்பிரயோகமாகும்.
அவ்வாறு செய்வதாயின் அதற்காக அமைச்சரவை அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறின்றி சபாநாயகர் இல்லத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது சட்டரீதியான குற்றமாகும்.
அதற்கு உடந்தையாக இருக்கும் சபாநாயகரை அரச சொத்துக்கள் துஷ்பிரயோகத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



