புதுக்குடியிருப்பு சந்தை வியாபாரிகளை பாதிப்பிற்குள்ளாக்கும் நடைபாதை வியாபாரிகள் (photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை அனைத்து வாணிபங்களின் உரிமையாளர்கள் முல்லைத்தீவு உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு நேற்று (29.03.2023) மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
அந்த மனுவில் மேலும்,
புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மரக்கறி, புடவை, பழக்கடை மற்றும் மீன் வாணிப உரிமையாளர்கள் ஆகிய நாம் தங்களுக்கு தெரியப்படுத்தும் விடயம் என்னவெனில் பொதுச்சந்தைக்கு நாளாந்தம் மக்கள் வருகை மிகவும் குறைவடைந்துள்ளது. மக்களின் வருகை குறைவடைந்தமையால் எமது வியாபாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கான காரணம் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து பரந்தன் வீதியிலும் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து முல்லைத்தீவு வீதியிலும் அனைத்து நடைபாதை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.
கோவிட் நோய் காரணமாக நடைபாதை வியாபாரம் செய்யலாம் என்பதை அனுமதித்தீர்கள். தற்போது கோவிட் நோய் இல்லாமல் போயும் நடைபாதை வியாபாரம் இன்று வரையும் தடைசெய்யப்படவும் இல்லை.
தற்காலிக வியாபாரிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்
தடை செய்யப்படாமையினால் நடைபாதை வியாபாரம் செய்தவர்களெல்லாம் வீதி ஓரங்களில் கடைகள் அமைத்து நிரந்தரமாக வியாபாரம் செய்து வருகிறார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பரந்தன் வீதியில் அமைந்துள்ள கைவேலிப்பகுதிச் சந்தையில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்வது எமக்கு பாதிப்பு இல்லை. முல்லைத்தீவு வீதி மந்துவில் சந்தையிலும் வியாபாரம் செய்யலாம்.
இரண்டு சந்தைகளையும் தவிர இடைப்பட்ட பகுதிகளில் நடைபாதை அனைத்தையும் முற்றாக தடைசெய்யுமாறு உங்களை மிகவும் பணிவாக கேட்டக்கொள்கிறோம்.
தொடர்ந்து நடைபாதை வியாபாரத்தினால் பொதுச்சந்தை அனைத்து வாணிப உரிமையாளர்களும் வியாபார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச சபையும் எங்கள் மீது அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
குறிப்பாக பரந்தன் வீதியில் புடவை வியாபாரம், மரக்கறி வியாபாரம், பழக்கடை வியாபாரம், மீன்கடை வியாபாரம் நடைபெறுகிறது. இதை விட கோழி இறைச்சிக்கடை மற்றும் பன்றி இறைச்சிக்கடையும் இருக்கிறது.
இவைகளை விட வெளி மாவட்டங்களில் இருந்து எவரும் வந்து வியாபாரம் செய்யலாம் என்ற நிலமை தற்போது புதுக்குடியிருப்பில் இருக்கின்றது.
நடைபாதை வியாபாரத்தை உடன் நிறுத்த கோரிக்கை
இந்த நிலமைக்கு காரணம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நிர்வாகமே. இப்படி அனைத்து விதமான வியாபாரமும் பரந்தன் வீதியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது எப்படி புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு மக்கள் வருவார்கள் என்பது எமது கேள்வியாகும்.
எனவே தான் இந்த நிலமை மாற்றம் பெறவேண்டுமானால் நடைபாதை வியாபாரம் செய்பவர்களை உடன் தடைசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்வது மந்துவில் சந்தையை அடுத்தது கைவேலிச்சந்தையிலும் வியாபாரம் செய்வதில் எமக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவேதான் நடைபாதை வியாபாரத்தினால் பொதுச்சந்தைக்கு மக்களின் வருகை மிகவும் குறைவடைந்துள்ளது. வியாபாரமும் குறைவடைந்துள்ளது. இதனால் வாங்கும் கடன்கள் திருப்பிக்கொடுக்க முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்தோடு எமது குடும்பத்தின் நாளாந்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்ய வேண்டிய நிலை
இந்நிலை தொடருமானால் நாம் தற்கொலை செய்யவேண்டிய நிலமைக்குத்தான் தள்ளப்படுவோம். அப்படியான சூழ்நிலை ஏற்படுமாயின் இதையும் நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதையும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
எனவே எமது நிலமை தொடர்பாக தங்களுக்கு முழுமையான விபரத்தினையும் தெரியப்படுத்தியுள்ளோம். நடைபாதை வியாபாரம் அனைத்தையும் முழுமையாக தடைசெய்யுமாறும் எங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்குமாறும் மிகவும் பணிவாக தங்களிடம் வேண்டிநிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவினை புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர்,புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
