பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்த நபருக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியின் குற்றச் செயலுக்கு எதிராக முறைப்பாடு செய்த ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த நபரை போதைவஸ்து குற்றச்சாட்டில் கைது செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரி மீது புகார்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள அப்துல் ஹமீது ரகுமத்துல்லா என்ற நபரின் காணிக்குள் அடைக்கப்பட்டிருந்த தகரம் மற்றும் வேலிகட்டைகளை காணிப் பிணக்கு விசாரணைக்காக வந்த ஏறாவூர் சிறுகுற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகனத்தில் ஏற்றிச் சென்று அதனை நீதிமன்றத்தில் பாரப்படுத்தாது தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்தி உள்ளார்.
இதனை அறிந்த பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து. குறித்த ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை விசாரணையின் பொருட்டு சிறு குற்றப் பிரிவு அதிகாரியாக இருந்தவரை போதைவஸ்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் புகார் வழங்கிய நபரை நேற்றைய தினம்(11.01.2023) தொலைபேசி ஊடாக பிணை ஒன்றிற்காக அழைக்கப்பட்டு அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு அவரை பொலிஸார் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
பொய் வழக்கு
இது குறித்து கைது செய்யப்பட்டவரின் மனைவியான நூர்ஜஹான் கூறும் போது, “எனது கணவரான அப்துல் ரகுமான் ஏறாவூர் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கொடுத்த முறைப்பாடு அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அவர் போதைவஸ்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தற்போது போதைவஸ்து பிரிவின் பொறுப்பதிகாரியாக உள்ள குறித்த பொலிஸ் அதிகாரி எனது கணவரை பழிவாங்கும் நோக்குடன் அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
நண்பர் ஒருவர் ஊடாக பிணை எடுப்பதற்காக பொலிஸ் நிலையம் வருமாறு தொலைபேசி ஊடாக எனது கணவரை அழைத்து அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர் தொலைபேசியில் பேசிய ஒலிப்பதிவுகள் உண்டு. ஆனால் அவரை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தாது அவரை மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவர் மிகவும் காயமடைந்துள்ளார்.
நாங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளோம். திட்டமிட்டு எனது கணவரை பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இவ்வாறான பொலிஸார் மீது உரிய விசாரணை நடாத்தி உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
