கிளிநொச்சியில் ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு
கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்களை கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக கொண்டு வெளிப்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன் அவர்களினால் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23.05.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய தினம் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வட மாகாண தொற்று நோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து கணக்காய்வு திணைக்களம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இந்த அறிக்கையின் பிரதியைத் தனது செய்தி மூலம் ஒன்றுக்கு ஊடாக பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர் அதனை அடிப்படையாகக் கொண்டு செய்தி அறிக்கையினை எழுதியிருந்தார் என தெரியவருகிறது.
குறித்த செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது. இதற்கு எதிராகவே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டு ஊடகவியலாளரிடம் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தவிரக் குறித்த ஊடகவியலாளர் இந்த ஊழல்கள் குறித்து தனது முகநூல்களில் பதிவுகளை இட்டிருந்தார் அதற்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.