அரசாங்கத்தின் பல்வேறு செயற்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு குழு நியமிப்பு
அரசாங்கத்தின் பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது இலகுபடுத்துவதற்காக நிறுவப்பட்ட திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகள் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குழுவின் தலைவராக கே.டி.கமல் பத்மசிறியும் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக என்.கே.நெம்மாவத்த மற்றும் ஆர்.எச்.ருவினிஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்
2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை 2022 நவம்பர் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் ஊடான அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புகளை கண்காணிக்க விசேட புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், செயற்திட்டங்கள் தொடர்பான அலுவலகங்களை ஒருங்கிணைத்து அவற்றின் செயற்பாடுகளை துரிதப்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
அபிவிருத்தி மற்றும் செயற்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
இதன்போது, அபிவிருத்தி மற்றும் செயற்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தொடர்புடைய அமைச்சினால் அதனை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள், அமைச்சின் பங்களிப்பு போன்ற விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தலும் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பணியாகும்.
கே.டி. கமல் பத்மசிறியை தலைவராகவும், என்.கே.ஜீ.கே. நெம்மவத்த, ஆர்.எச். ருவினிஸ் ஆகியோரை அங்கத்தவர்களாகவும் கொண்டு இந்த குழு செயற்படவுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறுகிய காலப் பகுதிக்குள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: அனதி