நெருக்கடியில் நாடு! அரச அதிகாரிகள் பலர் கைது
2022ஆம் ஆண்டில், ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் அரச அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் 1,945 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனோடு தொடர்புடைய 26 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனை உறுதிசெய்துள்ளது.
கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் பொலிஸ் துறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி காரணமாக இலஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்வி அமைச்சு, வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 212 பேருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு அடுத்த இடத்தில் அதிகளவான இலஞ்ச குற்றச்சாட்டுகள் பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், 161 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
26 அரச அதிகாரிகள் கைது
இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் இருப்பதுடன், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு காணி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.