யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை இடம்பெற்றது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.














இதேவேளை, யாழில் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியடியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன் , கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நாளை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப் படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.