மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கமின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (Joseph Pararajasingam) நினைவேந்தல் இன்று யாழில் அனுஷ்டிக்கப்படடது.
யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (Vishwalingam Manivannan) தலைமையில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு
நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
25.12.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் இன்று பிற்பகல் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கைகளிலும், கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலமானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மலர் மாலையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சோயோன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் ஆகியோர் அணிவித்தனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா, தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
