கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டம்: ஜனாதிபதி “உத்தரவையும் மீறி“ எடுக்கப்பட்ட தீர்மானம்! (Video)
கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று (14) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக அரச தலைவரது செயலகம் வரை சென்றனர்.
இதில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் நோயாளிகள் குறிப்பாக தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவோர் மற்றும் நாற்பட்ட நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் பொது மக்கள் நலன் கருதி போராட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கமைய அரச தாதியர் சங்கம் போராட்டத்திலிருந்து விலகியுள்ளது.
எவ்வாறெனினும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வைத்திய சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஏனைய 17 தொழிற்சங்கங்களும் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதன் காரணமாக இன்றும் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம், இரசாயன ஆய்வு கூட செயற்பாடுகள் மற்றும் கதிரியக்க பரிசோதனைகள்,உள்ளிட்ட சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வைத்தியசாலை சேவைகள் மாத்திரமின்றி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளும் முடங்கியுள்ளன.
அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக மருந்து விநியோகம் முற்றாக முடங்கியுள்ளமையால் இலங்கையில் அமைந்துள்ள அரச ஒசுசல வளாகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை வேண்டி ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டம் விரைவில் நிறைவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள இலங்கை சுகதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் செய்யக் கூடிய விடயங்களை செய்ய முடியும் என்று கூறுவதைப் போன்றே, முடியாதவற்றை முடியாது என்றே தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
மூன்றரை மாதங்களாக பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்த போது அதற்கான
சந்தர்ப்பத்தை வழங்காமல் , தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்த பின்னரே
பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சரின் கருத்து
தொடர்பில் சுகாதார நிபுணர்களின் மாநாட்டின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ்
தெரிவித்துள்ளார்.



