கொழும்பில் கோடீஸ்வர தொழிலதிபரின் வீட்டில் பெருந்தொகை பணம் கொள்ளை
கொழும்பு - மீகொட, உடகேவத்தை பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 80 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் அவரது பணியிடத்தில் பணிபுரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு கமரா காட்சிகளின் ஊடாக கண்டுபிடிப்பு
கேகாலை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞரே இவ்வாறு 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர் வெசாக் பௌர்ணமி விடுமுறைக்காக தனது ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கி தனது குடும்பத்துடன் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளார்.
வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாள் கொள்கலன் சரக்குகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தமையினால், இரண்டு நாட்களுக்கு முன்பு வியாபாரங்களில் இருந்து வசூலித்த பணத்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு யாத்திரைக்கு சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்குரிய குறித்த ஊழியரும் ஏனைய ஊழியர்களுடன் வீட்டிலிருந்து சென்று பின்னர் தொழிலதிபர் சென்ற பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து இந்த திருட்டை செய்துள்ளமை வீட்டின் பாதுகாப்பு கமரா காட்சிகளின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலமொன்றினை வாங்க திட்டம்
சந்தேகநபர் பணத்துடன் வீட்டிலிருந்து இரண்டு முச்சக்கர வண்டிகளில் சென்று அங்கிருந்து அனுராதபுரம் செல்லும் பேருந்தில் பயணித்து, அப்பகுதியில் உள்ள ஒரு தங்குமிடத்தில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்பின்னர், சந்தேகநபர் தனது நண்பரையும் மனைவியையும் 50,000 ரூபாய் வாடகை செலுத்தி ஒரு வானில் அழைத்து வந்து நிலமொன்றினை வாங்க திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், தொழிலதிபரின் வீட்டில் நடந்த ரூ. 8 மில்லியன் திருட்டு தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டினையும் விசாரணை அதிகாரிகள் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி