கொழும்பை மூழ்கடித்த வெள்ளம்! பின்னணியில் நிர்வாக அலட்சியம்..
கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்துக்கு வடிகான் பராமரிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத் தவறுகளே முக்கிய காரணம் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.எம். பைசல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொ்டர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களிலிருந்தே நிர்வாகக் குறைபாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வடிகான்களைச் சுத்தம் செய்த பின்னர் அவற்றிலிருந்து அகற்றப்படும் மண் மற்றும் கழிவுகள் உரிய நேரத்தில் அகற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மீண்டும் மழை பெய்யும்போது குறித்த கழிவுகள் வடிகான்களுக்குள் சென்று நீரோட்டத்தைத் தடை செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், வடிகான் சுத்திகரிப்புப் பணிகளுக்குத் தேவையான பேக்கோ இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களை முறையாகத் திட்டமிட்டு ஈடுபடுத்துவதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, மாநகர சபை ஊழியர்களின் பணிகளை உரிய முறையில் கண்காணிப்பதில்லை என்றும், பொறியியலாளர்கள் நேரடியாகச் சென்று பணிகளை மேற்பார்வை செய்து அவற்றின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளமும் பணிகளின் தரத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் ஊதியத்தை அதிகரித்து முறையான வேலைத்திட்டத்தின் கீழ் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மறுபுறம், பொதுமக்களும் வீதிகளிலும் வடிகான்களிலும் முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பைசல், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு எதிராக சுற்றாடல் பொலிஸ் குழுக்கள் ஊடாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.
கொழும்பின் கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, மருதானை, தெமட்டகொட மற்றும் சேதவத்தை உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.