கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
கொழும்பு - ஜிந்துபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (24) இரவு 9 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆட்டுபட்டித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 9 நாள்களுக்குள் 8 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஜனவரி 15 ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
முச்சக்கர வண்டியில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். 'படா ரஞ்சி' என அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இது பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலாகக் கருதப்படுகின்றது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாளக் குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராகச் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மேலும், ஜனவரி 20 ஆம் திகதி மாத்தறையில் 24 வயது இளைஞர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
அதேவேளை, ஜனவரி 22 ஆம் திகதி அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் பெலியத்தயில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதுவும் பாதாளக் குழு மோதலாகக் கருதப்படுகின்றது.
மேலும், கம்பஹா, கஹடான கணாராம விகாரையில் நேற்று நண்பகல் பௌத்த தேரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். காணிப் பிரச்சினையொன்றை அடிப்படையாகக்கொண்டு இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |