கொழும்பில் தொடரும் ஆபத்து - செயற்படாத இயந்திரங்கள்
கொழும்பு மாநகர சபையிடம் ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் இருந்தாலும் அதனை பயன்படுத்த கூடியவர்கள் இல்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்ததில் 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறிந்து விழும் மரங்கள்
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக நேற்று கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.